

""சமூகத்தில் ஒரு தவறு நடந்து விட்டால், எல்லாரும் அந்த தவறுக்கு எதிராக பேசுகிறோம். எது நடந்தாலும் அதைப் பற்றி ஒரு கருத்து எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால் அந்தத் தவறைத் திருத்துவதற்கு களத்தில் இறங்கிப் போராடுவது எத்தனை பேர்? ஏன் என்றால் எதாவது நடந்து விடுமோ? என்கிற பயம். நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? என்கிற உணர்வு. ஆனால் துளியும் பயம் இல்லாதவன்தான் என் ஹீரோ. நம்மை போல் ஒருவன். நாம் எல்லோரும் செய்ய நினைப்பதை செய்து முடிப்பவன். "அப்துல்கலாம் ஐயாவுக்கு அரெஸ்ட் வாரண்ட்' என்று என்னைக் கடந்து போன ஒரு பத்திரிகை செய்திதான் இந்த கதையின் முதல் புள்ளி. அது தந்த ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் என்னைப் பதில் தெரியாத எல்லைக்குக் கொண்டு சென்று விட்டன. அப்படி எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு நல்ல பதில் வைத்திருக்கிறேன்'' "நிமிர்ந்து நில்' பட ஒன் லைன் கேட்டதும் பளீச்சென பேசினார் இயக்குநர் சமுத்திரக்கனி. நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவர்.
எதார்த்த கதைகள் இன்னும் கூட தமிழ் சினிமாவுக்கு கை கூடி வரவில்லை... எதற்காக இந்த படம் ஓடியது என்ற ஆராய்ச்சிகள்தான் கமர்ஷியல் திரைப்படங்களின் மீது விழுகிறது... இந்த படத்தின் திரை வடிவம் என்ன?
தனியார் பள்ளி பேருந்தில் ஓட்டை வழியே கீழே விழுந்து உயிர் துறந்த சிறுமி. அங்கன்வாடி மையத்தில் கடந்த ஆண்டு எண்ணெய்ச் சட்டியில் விழுந்து இறந்து போன நான்கு மாதக் குழந்தை. திறந்திருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூச்சுத் திணறி இறந்து போன சிறுவன். பள்ளியில் கழிப்பறை இல்லாததால் சிறுநீர்த் தொற்று ஏற்பட்டு மரித்துப் போன ஒன்பதாம் வகுப்பு மாணவி. தறிக் கெட்டு ஓடிய வாகனம் மோதி இறந்து போன இரண்டாம் வகுப்பு மாணவன். இவையும் இன்னபிற செய்தித்தாள்களின் இடுக்குகளில் இடம் பிடிக்கும் செய்திகளையும் வாசிக்கக் கூட மறுத்து விடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அதிர்ச்சி. எதுவுமே அறியாமல் எதற்காகப் பாதிக்கப்படுகிறோம் என்பதே இங்கே புதிர். உள் நோக்கிச் சென்று பார்த்தால் எல்லாவற்றுக்கும் நாமே ஒரு வகையில் காரணமாக இருப்போம். அது தவறு... இது தவறு... என பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளைச் சரி செய்து கொள்ளத் தவறி விடுகிறோம். "இங்கு சிகரெட் பிடிக்க கூடாது' என எழுதியிருக்கும் வாசகத்துக்கு முன்பு நின்று தம் அடித்து விட்டுதான், இங்கே நாட்டைப் பற்றி சீரியஸôகப் பேசுவோம். சிக்னல் மீறுவது சிலருக்கு வழக்கமாகி விட்டது. "அவன் சரியில்லை... இவன் சரியில்லை' என்பதுதான் இங்கே ஆண்டாண்டு கால டீக்கடை பேச்சு. எவ்வளவு திட்டமிடல்களோடு ஒருவன் இருந்தாலும், அவனையறியாமல் அவன் நாட்களின் நிகழ்வுகளை மாற்றி எழுதி விட்டு போகிறது இந்த சமூகம். "உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும்' என்பதுதான் இதில் நான் வைக்கும் நீதி.
முதன் முதலாக ஸ்டார் நடிகர் ஒருவரை இயக்குறீங்க போல.... என்ன இருந்தாலும் சாக்லேட் பாய் இமேஜ் ஜெயம் ரவிக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது... இதில் முன்பைவிட அவருக்கு ஆக்ஷன் ஏரியா அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது...?
ரவியை எனக்குப் பிடிக்கும். அது மட்டும்தான் இந்த கதைக்குள் அவர் வரக் காரணம். "நாடோடிகள்', "போராளி' இரண்டு படங்களுமே ஸ்டார் நடிகருக்கான கதைகள்தாம். ஆனால் அதை நண்பன் சசிகுமாரை மனதில் வைத்து எழுதினேன். எனக்குள் எழுந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கான பதில்தான் இந்த கதை. சின்னச்
சின்ன இடைவெளியில் கதைக்கு இன்னும் கூர்மை கொடுத்த போது, ஜெயம் ரவிதான் கதைக்குள் அலை பாய்ந்தார். ஒரு சந்திப்பில் ""தம்பி... இது உன் முதல் படம் மாதிரி... நல்லா பண்ணனும்''ன்னு கேட்டுக் கொண்டேன். அப்படியே மறுபேச்சு பேசாமல் நடித்து கொடுத்திருக்கிறார். சரத்குமார், "நீயா நானா' கோபிநாத், அமலாபால் இப்படி கதைக்கு பொருத்தமானவர்களை நல்ல இடங்களில் பயன்படுத்தி கதைக்கு வலு கொடுத்திருக்கிறேன்.
ஜெயம் ரவியின் கேரக்டர் பற்றி பேசலாமே...?
அரவிந்தன் சிவசாமி இதுதான் ஜெயம் ரவியின் கேரக்டர். சின்ன வயதில் குருகுலத்தில் படித்து ப்ளஸ் டூவில் மாநில அளவில் மார்க் எடுத்தவன். அது இதுவென தவறிப் போகிற மாணவர்களுக்கு மத்தியில் ஒழுக்கமாக வளர்ந்தவன். எல்லோரும் தன்னைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டவன். கெட்டது நடந்தால் ஓரமாகப் போகிறவன் கிடையாது. சுள்ளென கோபம் வரும். அதனாலேயே அவனால் இந்த சமூகத்தோடு ஒட்டி வாழ முடியாது. அப்படிப்பட்டவன் கோபம் கொண்டு எழுந்தால் எப்படியிருக்கும்? ஆள்தான் சீரியஸ் தவிர அத்தனை ஹியூமர் சென்ஸ் உள்ளவன். ஜெயம் ரவிக்குள் பிரமாதமான நடிகன் இருக்கிறான். அதை வெளிப்படுத்தப் போகிற கேரக்டராக இது வந்திருக்கிறது. படத்துக்கு பட்ஜெட் பெருசு. இந்தியாவின் அத்தனை இடங்களிலும் நேர்த்தியான படப்பிடிப்புகள் நடந்து வந்திருக்கின்றன. என் சொந்தப் படம் போல் இயக்கும் வாய்ப்பு. தயாரிப்பாளர் எதற்கும், எப்போதும் நோ சொல்ல மாட்டார். அவருக்குக் கதை பிடித்திருந்தது. அந்த கதை நன்றாக வந்தால் போதும், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என வழி விட்டு நின்றார். அந்த உண்மைக்கு உன்னதம் சேர்த்திருக்கிறேன்.
நடிப்பதிலும் ஆர்வம் செலுத்துறீங்களே...?
விரும்பித்தான் செய்கிறேன். எல்லாருக்கும் என்னை பிடிக்கிறது. விமலுடன் "நீ எல்லாம் நல்லா வருவடா' படத்தில் நடிக்கிறேன். தனுஷுடன் "வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடிக்கிறேன். இன்னும் மலையாளத்தில் சில படங்கள். நட்பாக சிலர் கேட்கிறார்கள். ""சார் நீங்கதான் இதில் நடிக்கணும்''ன்னு சிலர் தொழில் ரீதியாக வருகிறார்கள். இப்போது "கோலி சோடா' படத்தில் கூட டப்பிங் பேசியிருக்கிறேன். சில நல்ல படைப்புகளில் நம் பங்கும் இருக்க வேண்டும் என்கிற உணர்வு, அக்கறையாக மாறி விடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.